Monday, October 8, 2012

அறிவுக்கொடை ஆய்


அறிவுக்கொடை ஆய்

கொடை வள்ளல்கள் யார்:

    

     கொடை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர்கள் தனக்கென வைத்துக்கொள்ளாது வந்து கேட்டவர்களுக்குக் கேட்டதைக் கொடுப்பவரையே வள்ளல்கள் என்போம். அத்தகைய வள்ளல்களைப் பற்றி இலக்கியங்கள் பலவாறு கூறுகின்றன. வள்ளல்கள் மொத்தம் 27 பேர்கள் என்றும், அவர்களில் முதல் ஏழு வள்ளல்கள்  சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன் என்றும்; இடையேழு வள்ளல்கள் அக்குரன், அந்திமான், கர்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் என்றும்; கடை ஏழு வள்ளல்கள் பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி, ஆய் என்பவர்கள் ஆவர். கடையேழு வள்ளல்களுள்  ஒருவராகிய ஆய் அண்டிரன் என்பவன் தமிழகத்தில்  வாழ்ந்திருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். அவன்  வேளிர்கள் என்பவர்களின்  குடியைச் சேர்ந்தவன்.  அவர்களுள் சிறந்தவன் ஆய் அண்டிரன் என்ற மன்னன். அவனை ஒளவையார்,  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஒடைக் கிழார், குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், பரணர், காரிக் கண்ணனார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். 264 அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளான். அவன் பொதிய மலையை ஆண்டுவந்தான். கொங்கு  நாட்டைத் தனக்குப் பணிய வைத்தவன். ஆய் அண்டிரன் மிகச்சிறந்த பண்பாளன் என்று ஒளவையார் பாடியுள்ளார்.265 இப் பிறப்பில் செய்யும் நன்மை மறுபிறப்புக்கு உதவும் என்று கருதித் தன் பொருளைக் கொடையாக அளித்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அல்லன் ஆய் என்று அவன் பாராட்டப் பட்டுள்ளான்.  அவனை  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் பாடியுள்ளார்.. இவர் இயற்பெயர் மோசி. இவர் முடவராக இருந்ததால் முடமோசியார் என்று அழைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் உறையூரின் ஒரு பகுதியாக இருந்த ஏணிச்சேரி என்னும் ஊரைச் சார்ந்தவர் . புறநானூற்றில் இவர் பதின்மூன்று பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் புகழந்து  பாடப்பட்டவை யாகும்.   ஒரு வள்ளலை ஊனமுற்ற புலவர்தான் பலவாறாகப் புகழ்ந்;து பாடியூள்ளார். ஆய் அண்டிரன் தன்னிடம் வரும் பரிசிலர்க்கு யானைகளின் தொகையைக் கணக்கிட்டால்,அவனிடம் புறங்காட்டி ஓடிய சமயத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும், வானம் முழுதும் விண்மீன்கள் பூத்து விளங்கினால் அவற்றின் தொகை ஆய் பரிசிலர்க்கு வழங்கும் யானைகளின் தொகைக்கு நிகராகலாம் என்றும் கூறுகிறார்.
 

ஈதல், தருதல், கொடுத்தல்:

 
         உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் தம்மினும் தாழ்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒன்றை வழங்குதல் ஈதலாகும். சமநிலையில் உள்ள இருவருள் ஒருவருக்கு மற்றொருவர் ஒன்றை வழங்குதல் தருதலாகும். தாழ்நிலையில் உள்ள ஒருவர் தம்மினும் உயர்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒன்றை வழங்குதல் கொடையாகும்.   ஆய் வழங்கிய கொடை அன்றே மறைந்தது. அவன்மட்டு மல்ல. அவனைப் போன்ற வள்ளல்கள் வ்ழங்கிய பொருட் கொடைகள் அவர்கள் காலத்திற்குப் பின் மறைந்தன. ஆனால் அறிவைக் கொடையாக வழங்கியவர்கள் விண்மீன் போன்று நிலைத்து வாழ்கின்றனர்.  நான் கூறப்போவது உலகில் முதல் முதலாக பார்வையற்றவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனை உதித்து அதைச் செயல்படுத்த நினைத்தவரைப் பற்றியாகும்.
 

வேலண்டீன் ஹாய்:

    

           நான் கூறப்போகும் ஆயின் முழுப்பெயர் வேலண்டீன் ஹாய் (Valentin Haüy) என்பதாகும். பிரன்ச் மொழியில் இவர் பெயர் ஹாய் என்று இருந்தாலும் அதனை அழகு தமிழில் ஆய் என்றே இங்கு குறிக்கின்றேன் (ஷேக்‌ஷ்பியரை செகப்பிரியர் என்பது போல). இவர் பிரான்சு நாட்டில் 1745 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். சாதாரன நடுத்தரக் குடுப்பத்தில் பிறந்த இவர் எப்பொழுதும் போல தம் 25ஆம் வயதில் செப்டம்பர் மாதம் ஒரு ஞாயற்றுக் கிழமை மாலை பரபரப்பு நிறைந்த பிரான்சு நகர வீதிவழியே சென்று கலைநிகழ்ச்சி நடைபெறும் உணவுக் கூடத்தின் மேடையருகே அமர்ந்து நிகழ்ச்சியைக் கவனித்தார். அருவருக்கத்தக்க ஆடை யணிந்த, இசை ஞானம் கிஞ்சித்தும் இல்லாத பத்து பார்வை யற்றவர்கள் இசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையுள்ளவர்களின் பார்வைக்கு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள்.  பார்வையற்றவர்கள் மீது யாரும் பரிவுகாட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் ஹாய் அவர்கள் மீது கொண்ட பரிவைத் தன் ஆழ்மனத்தில் பதிய வைத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் ஹாய் ஒருநாள் ஒப்பிட் (St. Obid)என்ற தேவாலயத்திற்குச் சென்றார். வழக்கம்போல பிச்சைக்காரர்களுக்குச் பிச்சை போட்டார். அதில் பார்வையற்றவர்களின் நடவடிக்கைகளை கவனிக்கத்தொடங்கினார். அவர்கள் காசினைத் தடவிப்பார்த்து தெரிந்து கொள்வதும், வழக்கத்திற்கு மாறாகக் காசளித்திருந்ததால் அதைத்திருப்பித் தரும் செயலும் இவர் மனதைத் தொட்டது. எந்த பிச்சைக்காரனும் காசு அதிகம் என்று திரும்பத் தந்ததாக வரலாறு இல்லாத நிலையில் நேர்மையுள்ள இந்த பார்வையற்றவர்கள் நிலை வித்தியாசமாகத் தோன்றியது. அதோடு இவர்கள் தொட்டறிந்த நிலை இவர் மனதைத்தொட்டது. :இவர் ஒரு பேராசிரியரும், போதகரும் ஆவார். இரண்டு செயல்கள் இவர் மனதைத் தொட்டன. ஒன்று தடவி அறியும் திறன். மற்றொன்று அவர்களின் நேர்மை. பார்வையற்றவர்களில் ஒருபிச்சைக்காரனை தேர்ந்தெடுத்தார். அவன் பெயர்தான் பிராங்கய்ஷ் லீஷர் என்பதாகும்.
 

கரும்பு தின்னக்கூலி:

    

    பார்வையற்ற பிச்சைக்காரனைத் தன்னுடன் அனுப்பினால்அவனுக்குக் கல்வி கற்பிக்கிறேன் என்று அவன் பெற்றோரிடம் அன்பாய்க் கேட்டுப் பார்த்தார்.   ”அவனை உங்களுடன் (ஹாய்யுடன்) அனுப்பி விட்டால் அவன் தொழில் பாதிக்கும்; அவன் தொழில் பாதித்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்” என்றனர். என் செய்வது? கொண்ட குறிக்கோளினைநிறைவேற்று வதற்காகப் பெற்றோரிடம்  பேசி ஒரு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார். அந்த உடன்பாட்டின்படி ஹாய் மூன்று நிபந்தனைக்கு உடன்பட்டார். அந்த நிபந்தனைகள் வருமாறு:  1. ஹாய் மாணவனாக ஏற்றுக்கொள்ளும் அந்த  பிராங்கய்ஷ் லீஷர் (François Leseuer) என்ற பார்வையற்ற பிச்சைக்காரனுக்கு. நாள்முழுவதும் உணவு வழங்க  வேண்டும். 2. தங்குவதற்கு இடமும்உடுத்த ஆடையும் தரவேண்டும். 3. பிச்சைஎடுத்தால் என்ன காசு கிடைக்குமோ அந்தக் காசை அவன் குடும்பத்திற்குக் (அதாவது அவன் பெற்றோருக்கு) கொடுக்கவேண்டும். நாகரிகத் தொட்டில் என்று இன்றைய தலைமுறையின ரால் பெருமையாகப் பேசப்படும் பிரான்சு நாட்டில் அன்றைய அவல நிலை இதுதான். ஊன முற்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அரசியல் வாதிகள், மதவாதிகள் மத்தியில் விடிவெள்ளியாய் தோன்றியவர்தான் இந்த ஹாய். இனி மேற்கொண்டு என்ன செய்தார்?


அறிவைக் கொடுத்தார் ஆய்:

            மரத்தால் தானே சில எழுத்துக்களையும், எண்களையும் செதுக்கித்தொடு உணர்வு மூலம் அவனைக் கற்பிக்கச் செய்தார். அவன் கற்றான் சிறிதளவு: ஆனால் இவர் பெற்றார் இன்பம் பேரளவு. இனி வாழ்நாள் முழுவதும் தன் ஆற்றலைப் பார்வையற்றவர்களின் கல்விக்கே செலவிடுவதென்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு அதைச் செயற்படுத்தத் தொடங்கினார். பார்வை யற்றவர்களுக்காக மேடாக்கப்பட்ட பெரிய அச்சடித்த(Embossed letters) புத்தகங்களை உருவாக்கினார். லத்தீன்,இசை, கணிதம், இலக்கியம் என்பனவற்றைக் கற்பித்ததோடு 1784 ஆம் ஆண்டு பாரிசில் ஒரு பள்ளியையும் தோற்றுவித்தார். இதுதான் உலகத்தில் தொடங்கப்பட்ட  முதல் பார்வையற்றோர் பள்ளி யாகும். அப்பள்ளியில் உணவு, உறைவிடம், கல்வி வழங்கியதோடு வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டது.  தன்னால் உருவாக்கப்பட்ட François Leseuer என்ற பார்வையற்ற மாணவனையே அந்த பள்ளிக்கு ஆசிரியராக்கினார். உலகில் முதன்முதலாக ஊனமுற்றவனுக்கு வேலைவாய்ப்பளித்தவரும் இவரேயாவார்.

கேளிக்கையிலும் ஒரு கோரிக்கை:

         பதினாறாம்  லூயி மன்னனும் அவன் மனைவி ராணி ஆண்டினாய்டும் ஹாய் நடத்தும் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டு தன் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விழாவை முடித்த கையோடு மறுநாள் (26.12.1786) பார்வையற்ற பள்ளிமாணவர்களை ஆசிரியரோடு தம் வெர்சாயில் அரண்மனைக்கு வரவழித்துப் பலர் அறிய பார்வையற்றவர்களின்  கற்றல் திறனை வெளிப் படுத்தச் செய்தார். இது பூசலார் பெருமையை நரசிம்ம பல்லவன் வெளிப்படுத்திய செயலைப் போலாயிற்று. அரச தம்பதியினரே அப்பள்ளிமீது அக்கறை கொண்டதால் அரசு அங்கிகாரம் பெற்ற முதல் பள்ளியாயிற்று. அதனுடைய பிரஞ்சு மொழி பெயர்தான்  ராயல்-டெஷ் ஜூன்ஷ் அவங்கள்ஷ்  (Royale des Juenes Aveugles) என்பதாகும். பின்னர் 1785 ஆம் ஆண்டு அப்பள்ளி Royal Institute for Blind Youth எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.. கர்ம வீரர், பார்வையற்ற வர்களுக்குக் கல்விக்கண் தந்த பேராசிரியர், மதபோதகர், பார்வையற்ற பள்ளியின் தாளாளர் நீண்டநாள் அப்பள்ளியில் இல்லை. அதற்கு என்ன காரணம்? 

பிரெஞ்சுப்புரட்சி:

       சில நூறு ஆண்டுகளாக போர்போன் வம்சத்தால் ஆளப்பட்டு வந்த பிரான்சில் மெதுவாக ஜனநாயக எண்ணங்கள் தழைக்கத் தொடங்கின. ரூசோ, வால்டயர் போன்ற பெரும் மெய்யிலாளர்கள் இந்த புதிய கருத்துகளைச் சமூகத்தில் விதைத்து, புரட்சி நெருப்புக்குத் தூபம் போட்டு வந்தனர். அதுவரை கொடுங்கோலர்களாக இருந்தாலும் திறமையான மன்னர்களைப் பெற்றெடுத்த போர்பன் வம்சத்தில் ஒரு திரனற்ற மன்னராக பதினாறாம் லூயி வந்து பிறந்தார். நாட்டில் புரட்சித் தீ புகையத் தொடங்கிய போது அதனை அவரால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கவும் முடியவில்லை, மக்களாட்சிக்குப் பச்சைக் கொடி காட்டி அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் முடியவில்லை. இதனால் நிலைமை மெதுவாக மோசமாகி 1780களின் இறுதியில் வெளிப்படையாகப் புரட்சி வெடித்து விட்டது. பதினாறாம் லூயி தனது வழக்கமான சொதப்பல் பாணியில் செயல்பட்டதால், பாரிசின் மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். முடியாட்சி யுடன் தொடர்புடை யவர்களை யெல்லாம் தீர்த்துக் கட்டத் தொடங்கினர். வெளிப்படையான புரட்சியின் முதல் காரியங்களில் ஒன்றாக பாஸ்டில் சிறையைத் தகர்த்து அதிலிருந்த கைதிகளை விடுதலை செய்தனர்.

 
முட்டாள்களும் அறிவாளிகளும்:

 

        ஐரோப்பாவில் எங்கு சளிபிடித்தாலும் பிரான்சிற்குத் தலைவலிக்கும் என்பார்கள். தற்போது பிரான்சிலேயே சளி பிடிப்பதுபோல புரட்சி அங்கு வெடித்தது. நதிகள் வற்றினால் கடலைப்பார்த்து ஆறுதல் அடையும். கடலே வற்றினால்…”உலகில் முட்டாள்கள்தான் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மாதிரியாக உள்ளார்கள்;  அறிவாளிகள் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளார்கள்” என்று பெர்னாட்ஷா கூறுவார். முடியாட்சியை இறக்குவதற் காகப்போராடிய பிரான்சு மக்கள் மீண்டும் நெப்போலியன் பொனபார்ட் என்பவனையே அரசனாக்கினார்கள்.  ஆம் ஹாய் நடத்திவந்த பள்ளியை அரசு எடுத்துக் கொண்டு அவரைப் பள்ளியை விட்டே துரத்தியது. ஆனால் சிந்தனையாளன் ஹாய் அங்கிருந்து ரஷ்யாவிற்குச் சென்றார். அங்கு ஆட்சியிலிருந்த சார் மன்னர் முதலாம் அலெக்‌ஷாந்தர்  துணையோடு பீட்டர்ஷ்பர்க் என்னுமிடத்தில் ஒருபார்வையற்றோர் பள்ளியைத் தொடங்கினார். இதுதான் ரஷ்யாவில் தொடங்கப்பட்ட  முதல் பார்வை யற்றோர் பள்ளியாகும்.  அதுமட்டுமல்ல ஹாயின் செயல் ஐரோப்பா முழுவதும் பரவியது. அதன் காரணமாக இங்கிலாந்து, ஆஷ்திரியா, ஜெர்மனி, ஹாலந்து, சுவிச்சர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் பார்வையற்றோர் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ’பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானினும் நனிசிறந்தது தான்’  ஆனால் ஹாய் தன் நாட்டிற்குத் திரும்பாமலேயே 18.03.1822 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 
அரசியல் புரட்சியும் அமைதிப் புரட்சியும்:

    

             1763க்கும் இடையில் நடந்த ஏழாண்டுப் போர் (Seven Years' War) உலகளாவிய இராணுவப் போராகும். 1789 முதல் 1815-ம் ஆண்டு வரை நடந்த பிரெஞ்சு யுத்தம் என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த போர்க்காலத்தில் ஐரோப்பா அமைதியிழ்ந்து ரணகளமாக  இருந்தது.  ஆனால் பிரான்சில் ஒரே ஆண்டில் நெப்போலியன் செய்த சீர்திருத்தங்கள் பிரமிப்பூட்டுபவை.  இன்றுவரை அவர் அறிமுகப்படுத்திய திட்டங்கள்,  அரசியல் சட்டங்களே பிரான்ஸில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் சிறந்த குடிமகன்கள், வீரர்கள், கலைஞர்களை கவுரவிக்கும் விருதுகளை 1802-ம் ஆண்டு நெப்போலியன் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் செவாலியே விருது! குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இன்றும் பிரான்ஸில் நடைமுறையில் உள்ளது நெப்போலியன் சட்டம்தான் (Code of Napoleon).இதே நேரத்தில் தமிழ் நாட்டில் வீரபாண்டியகட்டபொம்மன்  (கி.பி 1790- கி.பி 1799) ஆட்சி செய்து ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக இருந்தான். நெப்போலியன் ஒரு ராணுவ வீரன். அவன் அதிகாரத்தால் பிரான்சில் அரசியல் புரட்சி செய்தான். ஹாய் ஓர் ஆசிரியர். தன் அறிவாற்றலால் ஐரோப்பாவில் பார்வையற்றோர் கல்வியில் அறிவுப்புரட்சி செய்தார். அவர் பள்ளியில் படித்த லூயிபிரெயில் என்ற மாணவ ஆசிரியர் தான் பிரெயில் முறையைக் கண்டவராவார். அவரைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகக் காண்போம். தம் அறிவைச் சமுதாயத்திற்குக் கொடையாக அளித்த ஹாயை ஏன் அறிவுக்கொடை ஆய் என்று கூறக்கூடாது?