எந்த பெற்றோர் இனிய பெற்றோர்?
(நான் பார்வையற்றோர் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அனுபவித்த அனுபவங்களை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்துகின்றேன்.)
பழம் பலவாயினும் சுவை ஒன்றே!
ஒரு நாள் மாலை நேரம்! வழக்கம்போல் எங்கள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பிறபள்ளி மாணவர்களில் ஆறு பேரை அழைத்து உரையாடினேன். சங்கர்,சலீம், அசோக்,அந்தோணி, அர்பஜன், அகத்தியன் என்னும் பெயர்களைக் கொண்ட அவர்கள் படிக்கும் பள்ளியாலும், வகுப்பாலும், பேசும் மொழியாலும், சார்ந்துள்ள சமயத்தாலும், உடுக்கும் உடையாலும், ஏன் உடல் நிறத்தாலும் வேறுபட்டவர்களே. அதுமட்டுமன்றி அவர்கள் குடும்பம் கொன்டுள்ள கொள்கையாலும் எதிர்கால நோக்கத்தாலும், ஆர்வம் திறமை பழக்க வழக்கம் போன்ற பண்புகளாலும் வேறுபட்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களனைவரும் இந்தியர் என்ற நிலையில் ஒன்றுபட்டவர்கள். அவர்களிடம் மேலும் உரையாடி அவர்களது குடும்பச் சூழ்நிலையைக் கேட்டடறிந்தபோது அம்மாணவர்களின் பெற்றோர்களிடம் ஓர் ஒற்றுமை தெரியவந்தது. அவர்களனைவரும் தம்மக்களின் உடல் உள்ள வளர்ச்சியில் நாட்டமுள்ளவர்களாக இருந்தனர். ஒரு மரத்தின் வெவ்வேறு கிளைகளில் வெவ்வேறு காலங்களில் பழங்கள் தோன்றினாலும் பழத்திற்குள்ள அடிப்படையான சுவை ஒன்றாகவே அமைந்திருப்பதைப்போல நல்ல நிலையில் உள்ள குழந்தைகள் கற்கும் பள்ளியில் பல்வேறுவகைப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிலே தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இந்நிலை பார்வையற்ற செல்வங்களின் பெற்றோர்களிடம் காணமுடியுமா?
ஒருமரத்துப் பறவைகள்:
ஒரு மரத்தில் தங்கிச்செல்லும் பல இனத்துப் பறவைகளைப்போல பார்வையற்றோர் பள்ளியில் கல்வி பெறும் மாணவர்களை ஆராய்ந்தால் பல்வேறுவகையில் அவர்கள் வேறுபட்டிருப்பதுதெரியவரும். பார்வை இழந்ததிற்காண காரணம், பார்வை இழந்த வயது, பார்வை முறை எங்சியுள்ள பார்வையின் அளவு,குடும்பச்சூழ்நிலை போன்ற பல வகை களிலும் அவர்கள் வேறுபட்டிருப்பர். பார்வையற்றதம்மை எற்றெடுத்த எற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருப்பர் என்று எதிர் பார்க்கமுடியாது. அதற்குக் காரணமென்ன?
கண்களே வாயில்கள்:
உலகைக் காண்பதற்குக் கண்களே வாயில் என்பதற்கு ஏற்ப கண்கள் மூலமாக 80% அள்வுக்கு மேல் அறிவைப் பெறுகிறோம் என்பர் அறிவியலார். அத்தகைய கண்களைப் பெற்றிருக்க வேண்டிய பெறற்கரிய தம் மக்கட் செல்வங்கள் பார்வை இழந்தால் அல்லது பாதிக்கப்பட்டால் பெற்றோர் உள்ளம் பாதிக்கப்படுவது இயற்கையே. தங்கள் குழந்தையின் தற்கால நிலை, சமூகம் தங்களைப் பற்றிக் கருதும்நிலை போன்றவற்றைப் பெற்றோர் எண்ணுகின்றனர். தங்களையும் தங்கள் குழந்தையையும் சமூகம் ஏற்குமா அல்லது எள்ளி நகையாடுமா!இரக்கம் காட்டுமா அல்லது உதறித்தள்ளுமா! என ஏங்குகின்றனர். அதன் விளைவாகப் பெற்றோர் குழந்தைமீது செலுத்தும் மனப்பான்மைகளும் மாறுபடுகின்றன. அத்தகைய மனப்பான்மைகளை ஐந்து வகைகளாகப்ப் பிரிக்கலாம்.
உனக்காகவே வாழ்கிறேன்:
ஊனமுற்ற குழந்தை பிறந்தாலும் அல்லது இடையில் ஊனமுற்றாலும் அதன் ஊனத்தில் எங்களுக்கும் பங்குண்டு என்ற உள்ளத்தோடு சில பெற்றோர் குழந்தையின் ஊனத்தை ஏற்று (Acceptance of the Blind and his Handicap) வேண்டிய அன்பும் ஆதரவும் அளிப்பர். குழந்தைக்காகவே தாங்கள் வாழ நினைப்பர். கல்வி கேள்விகளில் சிறந்தவனாக்க விரும்புவர். இத்தகைய அன்பு மழையில் நனைந்துவிடும் குழந்தையை ஏற்றுப் போதிய அறிவாயுதத்தைத் தரும்போது சமூகத்தில் ஏனையோரைப் போல் நல்ல திறமையுடைய நிறை மனிதனாக விளங்க முடியும். பார்வையற்றவர்களுக்கு முன்மாதிரியாக இப்படிப்பட்ட சிலர் சமூகத்தில் வாழமுடியும். தங்கள் ஊனத்தையே பெரிதாகக் கருதாமல் படிப்படியாக உயர்ந்து செல்வர்.
குருவி தலையில் பனம்பழம்:.
மற்றொரு வகைப்பெற்றோர்கள் மேற்கூறிய வகைக்கு மாறுபட்டிருப்பர். இத்தகையோர் தங்கள் குழந்தையின் ஊனத்தையே ஏற்க மறுத்து ஏனைய குழந்தை போல (Denial of the Effect of the Handicap) இருக்க வேண்டும் என விரும்புவர். தம்மின் தம்மக்கள் அறிவுடையவராக விரும்புவர். இது சின்னங்சிறு குருவி தலையில் அது தாங்க முடியாத அளவுக்குப்பெரிய பனம்பழத்தை வைப்பதை போன்றதாகும். இதன் காரணமாகக் குழந்தை அதைரியமடையும். பெற்றோர்களிடமிருந்து தமக்குப் போதிய பாதுகாப்பில்லை என உணரும். பார்வையுடையோர் செய்யும் செயல் முழுவதையும் பார்வையற்றோர் செய்ய இயலாது என்பதை உணராத பெற்றோர்களிடையே வளரும் குழந்தை எதிர்காலத்தில் தம் பெற்றோரையே வெறுக்கும். குடும்பம், சமூகம் என்ற சொற்கள் பொருளற்ற சொற்களாகவே அவன் வருங்கால் வாழ்வில் அமைந்துவிடும். தன்னலமே பெரிதாகக் கருதி வாழத்தொடங்குவர்.
பூனை கண்ணை மூடினால்:
வேறொருவகைப் பெற்றோர்கள் மேற்கூறிய இரண்டு வகைகளிலும் மாறி இருப்பர். தங்கள் குழந்தை ஊனமடைந்தது என்றவுடன் உலகமே ஊனமடைந்ததாகக்கருதி போர்க்கால நடவடிக்கை போல் தங்கள் குடும்பத்தின் அனைவரின் உதவியையும் ஊனமுற்றவனுக்கே என்று விழுந்தடித்து;க்கொண்டு உதவுவர். எதிர் பாராமல் வலிந்து கிடைக்கும் உதவியை முதலில் ஏற்கும் குழந்தை, பின்னர் உதவியை எதிர்பார்த்து ஏங்கும்; பின்னர் உதவியை கேட்டுப் பெற்றுக்கொள்ளும். குழந்தைக்கு அதிக பாதுகாப்புத் தந்து (Over Protectiveness) தம் கடமையைச் செய்து விட்டதாகப் பெற்றோர் நினைத்தாலும் மறைமுகமாக தங்கள் குழந்தைப் பின்னுக்குத் தள்ளப்பட்டதைப் பின்னர் பெற்றோர் உணர்வர். வளர்ந்த நிலையில் ஊனமுற்றவரும் உணர்வர். அதிக பாதுகாப்புத் தருவதால் குழந்தையின் உடல், உள்ள, சமூக வளர்ச்சி பாதிப்படைய ஏதுவாகும். ஊனத்தைக் காரணம் காட்டிப் பிறரிடமிருந்து குழந்தையைப் பிரித்தல் கூடாது. இதனால் ஓடி விளையாடும் குழவிப் பருவத்திலும், துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்திலும் பிறர் எள்ளி நகையாடும் நிலையைக் குழந்தை அடைந்துவிடும். அதோடு மட்டுமன்றி உடல் நிலைகூட ஏனையோர் போன்று முழுவளர்ச்சி அடையாது. ’ பார்வையற்றவனுக்கு இது தெரிய வேண்டாம்; அவன் துன்பப்படக்கூடாது ‘ எனப் பெற்றோர் அன்பின் மிகுதியால் ஒதுக்குவதால் வீட்டில் உள்ள சாதாரண பொருட்களைக் கூட அறியாது மனவளர்ச்சியில் மட்டுப்படுவான். குடும்பத்திற்கு வந்து செல்லும் உறவினர் நண்பர் பற்றிய அறிவைக் கூட ஊனமுற்றவனுக்கு ஏற்படுத்தாவிடில் அது அவனது சமூகவளர்ச்சியைப் பாதிக்கும். ஒரே குடும்பத்தில் பிறந்துவளர்ந்த சாதாரண குழந்தையைவிட அதிக பாதுகாப்பில் வளர்ந்த ஊன்முற்ற குழந்தை பிந்தங்கியிருப்பதைக் காணலாம்.
பசுத்தோல் போர்த்திய புலி:
இன்னொரு வகைப்பெற்றோர்கள் தங்களது பார்வையற்ற குழந்தையை மனதுக்குள் வெறுப்பர். ஆனால் தங்கள் குழந்தையின் முன்னிலையிலும் பிறர் முன்னிலையிலும் தன் குழந்தைக்குத் தன்னைவிட அன்பும் பணிவிடையும் செய்வோர் வேறு யாரும் இல்லாததுபோல் (Disguised Rejection) கபடமாக நடிப்பர். தான் போர்த்திருக்கும் தோலைக்கொண்டு மக்களை ஏமாற்றும் புலியைப் போல தாங்கள் வாழ்வது தங்கள் குழந்தைக்காகவே என்று வெளியுலகில் நடிக்கும் நடிப்புப் போலிகளால் பெற்றோர்களின் காலத்திற்குப் பிறகும் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர் துன்புற வேண்டிய நிலையை அடைவர். பெற்றோரைப் போல ஏனையோரும் போலி அன்பை ஊனமுற்றவனிடம் காட்டினால் ஊனமுற்றவன் சமூகத்தின் மீது வெறுப்புக்கொள்வதோடு சமூகவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட நேரிடும்.
வேண்டாத விருந்தாளி:
பிறிதொரு வகைப்பெற்றோர்கள் ஏனைய நான்கு நிலையினருக்கும் முற்றிலும் வேறுபட்டிருப்பர். தமக்கு வேண்டாத விருந்தாளி வந்தால் வெறுப்போடு உபசரிக்கும் இல்லத்தார் போல் தாங்கள் எதிர்பாராத நிலையில் குழந்தை ஊனமடைந்தாலோ அல்லது ஊனத்தோடு பிறந்தாலோ பெற்றோர் வெளிப்படையாகவே(Open Rejection) குழந்தையை வெறுப்பர். பிறர் இரக்கம் காட்டினாலும் பெற்றோர் இரங்க மாட்டார்கள். அதுமட்டுமண்ட்றி இரங்குவோர்மீதும் குறை காணவே முயல்வர். தாய் வெறுத்தால் தந்தையையும், தந்தை வெறுத்தால் தாயையும் நாட வேண்டிய குழந்தையை இருவரும் வெறுத்தால் யாரை நாடும்.
சிலர் தங்கள் குழந்தை ஊனமடைவதற்குத்தாங்களேகாரணமாக இருந்தும் ஒன்றுமறியா குழந்தையையும், முன்னோர்களையும் வெறுப்பதுண்டு. இத்னால் குழந்தை தனக்கு பாதுகாப்பின்மையை உணர்ந்து தனது குறைபாட்டையே பெரிதாக எண்ணுவான்; மனவியாதியால் பாதிக்கப்படுவான்;சமூகம் ஏற்கா பழக்க வழக்கங்களை மேற்கொள்வான். இத்தகையோர் பள்ளியிலும் பின்னர் வேலை செய்யும் இடங்களிலும், சமூகத்திலும் பிறறின் வெறுப்பிற்கும் விரோதத்திற்கும் ஆட்பட வேண்டியநிலை ஏற்படும்.
எந்த பெற்றோர் இனிய பெற்றோர்?
மேற்கூறிய ஐந்துவகைப் பெற்றோர் இருப்பதற்குக்காரணம் என்ன? அதில் எந்தவகைப் பெற்றோர் இனிய பெற்றோர்? ஏனைய வகைப் பெற்றோர்களிடம் காணப்படும் குறைபாட்டை நீக்கமுடியாதா? அதற்கு வழிஎன்ன? எல்லா வகையான பெற்றோர்களும் தாங்கள் பெற்றுள்ள ஊனமுற்ற குழந்தையால் சோர்வு அடையாவண்ணம் மனப்பக்குவம் கொள்ளச்செய்யமுடியும். பார்வையற்றவர்களின் பெற்றோர்களனைவரும் இனிய பெற்றோர்களாக விளங்கமுடியும். அதற்குச் சிறந்த வழிகாட்டுநிலையங்கள் அமைத்தல் வேண்டும். வளர்ந்துள்ள மேலைநாடுகளில் ஊன்முற்ற குழந்தையைப் பெற்றுள்ள பெற்றோர்களுக்கு அறிவுரைவழங்க(Counselling) நல்ல வழிகாட்டு நிலையங்கள்(Guidance Centres) உள்ளன. நம் நாட்டில் அத்தகைய அமைப்பு முறைகள் இல்லை. காலம் கனிந்துவரும். கனவுகள் நினைவாகும்.